மணிலா விதை இலவசமாக வழங்கவேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


மணிலா விதை இலவசமாக வழங்கவேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2017 4:30 AM IST (Updated: 12 July 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மணிலா பயிரிடும் விவசாயிகளுக்கு இலவசமாக விதை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக் கட்டு, காட்பாடி தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.

விவசாயிகள் பேசிய தாவது:-

குடியாத்தம் நகராட்சி கழிவுகள் பாக்கம் கிராமத்தில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே இங்கு குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். வேலூரில் இருந்து அரியூர், ஊசூர், அணைக்கட்டு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் முன் அறிவிப்பு இன்றி ‘திடீர்’ என்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அணைக்கட்டு, வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் தாலுகாக்களில் பெரும்பாலான விவசாயிகளுக்கு உழவர்பாதுகாப்பு அட்டை வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை பெற முடியவில்லை. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூராட்சி அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறச்சென்றால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சான்று இருந்தால் மட்டுமே வழங்க முடியும் என்று கூறி அதற்காண விண்ணப்பங்கள்கூட வழங்க மறுக்கிறார்கள். குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை இருந்தாலே பிறப்பு, இறப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மணிலா விதையை இலவசமாக வழங்கவேண்டும். 100 சதவீதமானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான குழாய்களை கொண்டுவருவதற்காக ஏற்படும் செலவில் 5 சதவீதம் விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதை அரசே ஏற்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story