விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் படுகாயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (வயது 68). இவர், பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை ரோந்து பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2013-ம் ஆண்டு சொந்த வேலையாக சென்னை சென்றிருந்த சுலைமான் அங்கிருந்து புறப்பட்டு அரசு பஸ்சில் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்த போது, அங்கு ஏற்கனவே விபத்தில் சிக்கி நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இதில் அரசு பஸ்சிலிருந்த சுலைமான் படுகாயம் அடைந்தார்.

அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், எனவே விபத்தில் படுகாயமடைந்த தனக்கு திருச்சி கோட்ட அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 11-3-2014 அன்று சுலைமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடந்த 20-8-2015ல் உத்தரவிட்டார். எனினும் அந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இழப்பீடு வழங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுலைமான் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலராஜமாணிக்கம், சுலைமானுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூருக்கு வரும் திருச்சி கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும். மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 720-ஐ இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பேரில் துறையூர்-பெரம்பலூர் மார்க்கமாக செல்லும் அரசு பஸ் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கோர்ட்டு அமீனா செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் அந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர். ஜப்தி செய்யப்பட்டதற்கான உத்தரவு நோட்டீசையும் அந்த பஸ்சில் ஒட்டினர். இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கி மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story