டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்களுக்கு மிரட்டல்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்களுக்கு மிரட்டல் 4 பேர் மீது புகார்
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்வத்தான்பட்டியில் கிராம பொதுமக்கள் மற்றும் கருங்காலக்குடி பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடந்து செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பணிகள் நடந்துவந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததை தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். அப்போது அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என உறுதியளித்தனர்.
இந்தநிலையில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை அதே கிராமத்தை சேர்ந்த கணேசன்,சுரேஷ், உக்கிரபாண்டி, அபிமன்யூ ஆகிய 4 பேர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராமமக்கள் 200–க்கும் மேற்பட்டோர் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக புகார் மனுஅளித்தனர். அவர்களிடம், போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.