பல்லாவரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி


பல்லாவரம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 13 July 2017 5:00 AM IST (Updated: 13 July 2017 12:59 AM IST)
t-max-icont-min-icon

பால்கனியில் தவறி விழுந்த பந்தை இரும்பு கம்பியால் எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 5–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பசும்பொன் நகர் டாக்டர் உதயமணி தெருவைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவருடைய மகன் ஆதித்ய நாராயணன் (வயது 10). இவன், அங்குள்ள பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை பக்கத்து வீட்டு மாடியில் பந்து வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது பந்து, பால்கனியில் தவறி விழுந்துவிட்டது. அங்கு கிடந்த இரும்பு கம்பியால் அந்த பந்தை எடுக்க முயன்றான்.

அப்போது அருகில் சென்ற மின்சார வயரில் இரும்பு கம்பி உரசியது. இதில் மாணவன் ஆதித்ய நாராயணனை மின்சாரம் தாக்கியது. உடல் கருகிய அவன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான்.

அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆதேஷ் (4) என்ற சிறுவன் மயங்கி விழுந்தான். காயம் அடைந்த அவன், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* கிண்டி ரேஸ்கோர்சில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு தொடர்பாக அவரது நண்பர்களான பிரபாகரன் (30), சந்திரசேகர் (28), கார்த்திக் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியில் கத்தியுடன் வலம் வந்ததாக, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (22), முரளி (20), சுரேஷ் (23) உள்பட 5 பேரை பேரீசார் கைது செய்தனர்.

* ஆவடி பகுதியை சேர்ந்த அனீஷ் (29) என்பவரது செல்போனை திருடியதாக ரவீந்திரன் (25) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* சரியான வேலை கிடைக்காததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சேகர் மகன் செல்வகணபதி (16) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* வடபழனியை சேர்ந்த ஷீலா (20) நேற்று முன்தினம் அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகே ஆட்டோவில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். இதில் தீனா என்பவர் சிக்கினார்.

* சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

* கல்லூரி மாணவரான ஆவடி பகுதியை சேர்ந்த சுதர்சன் (17) நேற்று மாலை ஆவடியில் இருந்து சென்ற புறநகர் மின்சார ரெயிலில் கூட்டம் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

* திருவான்மியூரில் ஒரு குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்த மல்லிகா (60) என்ற பெண் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கிறார்கள்.

* புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது தவறி விழுந்து பலியானார்.

* சென்னை மருத்துவ கல்லூரி விடுதி காப்பாளர் நாகராஜ் (52) அறையில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

* குடிபோதைக்கு அடிமையான சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குணசேகரன் (29) நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* ஆவடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான குருஆனந்த் (18) வீடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த ராணுவ வாகனம் மோதியதில் பலியானார்.


Next Story