சாலையில் கட்டிய காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளிய பள்ளி மாணவர்கள்–பரபரப்பு


சாலையில் கட்டிய காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளிய பள்ளி மாணவர்கள்–பரபரப்பு
x
தினத்தந்தி 13 July 2017 4:45 AM IST (Updated: 13 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே சாலையில் கட்டிய காம்பவுண்டு சுவரை பள்ளி மாணவர்கள் இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பாளையங்கெட்டியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே செல்லும் சாலையை மாணவ–மாணவிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் சாலை அமைந்துள்ள பகுதி தனக்கு சொந்தமான நிலம் எனக்கூறி காம்பவுண்டு சுவர் கட்டினார். இதனால், அந்த சாலையின் அகலம் குறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் சாலை அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறி சாலையில் கட்டியிருந்த காம்பவுண்டு சுவரை இடித்து தள்ளினர். இதில் காம்பவுண்டு சுவரின் பெரும் பகுதி இடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பள்ளி நிர்வாகிகளும், காம்பவுண்டு சுவர் கட்டிய தனிநபரும் போலீஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story