நாராயணசாமி – வைத்திலிங்கம் கொடும்பாவி எரிப்பு பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம்


நாராயணசாமி – வைத்திலிங்கம் கொடும்பாவி எரிப்பு பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 5:15 AM IST (Updated: 13 July 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கத்தின் கொடும்பாவியை எரித்து பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னர் கிரண்பெடி அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பினார்.

இதை கண்டித்து புதுவையில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று அவர்கள் நேரு வீதி–மி‌ஷன் வீதி சந்திப்பில் கூடினார்கள். அங்கிருந்து பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலம் மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தது. அப்போது அவர்கள் சட்டசபை நோக்கி செல்லாமல் இருக்க போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

அதை தள்ளிக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியினர் முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே கூட்டத்தின் பின்புறத்தில் சிலர் முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோரின் கொடும்பாவிகளை காரில் கொண்டு வந்து எரித்தனர்.

உடனடியாக போலீசார் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 150 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிது நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story