பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பெங்களூரு ராஜாஜிநகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 16–ந் தேதி நடக்கிறது.
பெங்களூரு
பெங்களூரு ராஜாஜிநகர் 5–வது பிளாக் 10–வது மெயின் ரோடு 65–வது கிராசில் பாலதண்டாயுதபாணி ஞானமந்திரா அறக்கட்டளைக்கு சொந்தமான பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் முருகன், பாலதண்டாயுதபாணியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த நிலையில் இக்கோவில், கோவில் நிர்வாகத்தினரால் புனரமைக்கப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு வருகிற 16–ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
கும்பாபிஷேக விழா கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி அளவில் கோ பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. அப்போது மூலவர் முருகனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாலையில் கோவிலில் வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கரஹாளம், பிரவேசபலி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் அஷ்டலட்சுமி ஹோமமும், தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக பூஜை, ஹோமமும், மாலையில் அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், காலகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, முற்கால யாக ஹோமமும், தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.15–ந் தேதி காலை 8.30 மணியளவில் 2–ம் கால யாக பூஜையும், யாக ஹோமமும், மாலை 5 மணியளவில் 3–ம் கால யாக பூஜையும், விக்கிரகங்கள், எந்திர பிரதிஷ்டை அஷ்ட பந்தனம் சாத்துதல், 3–ம் கால யாக பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
அதன்பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் வருகிற 16–ந் தேதி காலை 7.30 மணியளவில் 4–ம் கால யாக பூஜை தத்வார்ச்சனையுடன் தொடங்குகிறது. அதன்பிறகு ஸ்பர்ஷ சாந்தி, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை சரியாக 10.15 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.பின்னர் மாலை 7 மணியளவில் ரதம் புறப்பாடும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.