மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு ஈசல் பிடிக்க சென்றபோது பரிதாபம்


மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு ஈசல் பிடிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 July 2017 10:15 PM GMT (Updated: 13 July 2017 8:58 PM GMT)

திருக்கோவிலூர் அருகே ஈசல் பிடிக்க சென்ற தொழிலாளி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அருணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60), தொழிலாளி. இவர் இரவு நேரங்களில் ஈசல் பிடிப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளி பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினரிடம் ஈசல் பிடிக்க வயல்வெளி பகுதிக்கு செல்வதாக கூறிச் சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வயல்பகுதியில் ராமச்சந்திரனை தேடினர். அப்போது கல்லந்தல் கிராமத்தில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அவருடைய குடும்பத்தினர் ராமச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கரும்பு தோட்டத்தில் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்த விவசாயியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story