மசினகுடி அருகே குடிநீருக்காக அலைந்து திரியும் ஆதிவாசி மக்கள்


மசினகுடி அருகே குடிநீருக்காக அலைந்து திரியும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 13 July 2017 10:21 PM GMT (Updated: 13 July 2017 10:20 PM GMT)

மசினகுடி அருகே குடிநீருக்காக ஆதிவாசி மக்கள் அலைந்து திரிந்து வருகிறார்கள். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் என பல்வேறு ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தோடர், கோத்தர் இன மக்கள் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், இருளர் இன மக்கள் கீழ்கோத்தகிரி, ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.
பனியர் மற்றும் குரும்பர் இன மக்கள் கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு ஆகிய பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பனியர் மற்றும் குரும்பர் இன மக்கள் குடிநீர் இன்றி பல ஆண்டுகளாக அலைந்து திரியும் நிலை காணப்படுகிறது.

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ட குரும்பர் இன ஆதிவாசி மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும் சூழ்நிலை உள்ளது.

கோடை காலங்களில் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வரும் ஆதிவாசி மக்கள் நடப்பாண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால், குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளனர். இதையடுத்து தங்கள் பகுதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத் துக்கும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதன் காரணமாக குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகிறார்கள்.

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
பொக்காபுரம் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தேவையான மின்சார வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுடைய அன்றாட தேவைக்கு குடிநீர் வசதி கூட இல்லை. இதனால் நாங்கள் குடிநீரை தேடி அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
பேரூராட்சி மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் எங்களது கிராமத்தில் வினியோகம் செய்வது இல்லை. 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால், அங்குள்ள ஒரு குழாயில் தண்ணீர் வரும். அதனை குடங்களில் பிடித்துக்கொண்டு வனப்பகுதி வழியாக நடந்து வர வேண்டும்.
அதுவும் காலை நேரங்களில் குறைவாக மட்டுமே வருவதால், ஒரு குடம் தண்ணீருக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்ல முடியாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.

குடிநீர் வராத நாட்களில் அலைந்து திரிய வேண்டும். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணமாகும். எனவே எங்களுடைய குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story