மும்பையில் 16–ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
மும்பையில் 16–ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை
மராட்டியத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வறண்ட வானிலையே நிலவியது. அவ்வபோது சாரல் மழை மட்டும் பெய்து வந்தது.
நேற்று காலை நேரத்தில் வெயில் அடித்தது. பின்னர் வானில் கருமேகங்கள் திரண்டு ரம்மியமான வானிலை நிலவியது. நகரின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்தநிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மராட்டியத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
குஜராத் பகுதியில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது இன்று முதல் (நேற்று) வலுப்பெறும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வருகிற 16–ந்தேதி வரையிலும் தீவிரமாக இருக்கும்.இதன் காரணமாக குஜராத்தின் கடலோர பகுதிகள் மற்றும் கொங்கன் மற்றும் மும்பையில் மிக கனழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதவிர மராட்டியத்தின் மராத்வாடா பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.
இந்த நேரத்தில் அரபிக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் யாரும் 5 நாட்களுக்கு கடலுக்குள் செல்லவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.