கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு கலெக்டரின் அறிவிப்பை ஏற்று முடிவு செய்வதாக தலைவர் அறிவிப்பு


கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு கலெக்டரின் அறிவிப்பை ஏற்று முடிவு செய்வதாக தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2017 2:30 AM IST (Updated: 14 July 2017 7:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கடந்த 10 நாட்களாக நடந்த விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கடந்த 10 நாட்களாக நடந்த விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கலெக்டரின் அறிவிப்பை ஏற்று முடிவு செய்வதாக தலைவர் தெரிவித்தார்.

காத்திருக்கும் போராட்டம்

கடந்த 2 ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை வாபஸ் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 5–ந்தேதி காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

10–வது நாளாக...

விவசாயிகள் தினமும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினர். நேற்று 10–வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கீதா, காளிராஜ், நவநீதகிருஷ்ணன், அழகர்சாமி, பகத்சிங் மன்ற தலைவர் உத்தண்டராமன், மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒத்திவைப்பு

பின்னர் மதியம் மாநில தலைவர் நாராயணசாமி பேசுகையில், ‘கடந்த 2015–2016–ம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்கவும், 2016–2017–ம் ஆண்டு பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியவர்களுக்கு மகசூல் அடிப்படையில் இழப்பீட்டு தொகை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதனை ஏற்று, காத்திருக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். பயிர் காப்பீட்டுதொகை வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்தால் மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகளின் வீடுகளின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

இதையடுத்து கடந்த 10 நாட்களாக நடந்த காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story