மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்ட சட்டம்–ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சமீப காலங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் பள்ளி–கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் அரசு வேலைக்கு சேரும்போதுதான் அந்தந்த போலீஸ் நிலையங்களில் நன்னடத்தை சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். ஆனால், தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர வேண்டும் என்றாலும் இந்த சான்றிதழ் பெற்று வழங்க வேண்டிய நிலை உள்ளது. போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இதனை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். கலவரக்காரர்களின் சதிச்செயலில் சிக்கி எதிர்காலத்தினை பாழ்படுத்தி விடக்கூடாது.
குற்றச்செயல்கள் உள்ளிட்ட சட்டம்–ஒழுங்கு செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் நோக்கம் மாணவர்களின் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்பதல்ல. ஆனால், அதேநேரம் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டு மென்மை போக்கினை கடைப்பிடித்துக்கொண்டு இருக்க மாட்டோம். வழக்கு பதிவு செய்தல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல், கோர்ட்டில் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துதல், தண்டனை வாங்கி கொடுத்தல் என அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பள்ளி–கல்லூரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். எனவே, மாணவர்கள் கலவரம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தங்களின் எதிர்காலத்தை பாழ்படுத்திக்கொள்ளக்கூடாது.
மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியல் தயாரித்து அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் என்று சந்தேகப்படக்கூடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும். மாவட்டத்தில் பிடிவாரண்டு குற்றவாளிகளை உடனடியாக தேடிபிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் தீவிரம் காட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
வருகிற 27–ந்தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாலும், அதில் முக்கிய பிரமுகர்கள் வர உள்ளதாலும் அதற்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகளை முன்ஏற்பாடாக செய்து வருகிறோம். விழாவில், பிரதமர் கலந்து கொள்வது குறித்து எந்தவித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் முக்கிய பிரமுகர்கள் வரலாம் என்பதால் அதற்கு ஏற்ப எங்களின் நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தங்க கடத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதால் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உடன் இருந்தார்.