கலெக்டரை சந்திக்க தாமதப்படுத்தியதாக கூறி த.மா.கா.வினர் தர்ணா போராட்டம்


கலெக்டரை சந்திக்க தாமதப்படுத்தியதாக கூறி த.மா.கா.வினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 15 July 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டரை சந்திக்க தாமதப்படுத்தியதாக கூறி ஊட்டியில் த.மா.கா.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் த.மா.கா.வினர், விவசாயிகள் பிரச்சினை குறித்த கோரிக்கை மனு அளிப்பதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடக்கிறது. எனவே, சிறிது நேரம் காத்திருங்கள் என்று த.மா.கா.வினரிடம் கூறினர்.

இதனிடையே தங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலெக்டரை சந்திக்க தாமதப்படுத்தியதாக கூறி, த.மா.கா.வினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் கலெக்டரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து மாநில தலைவர் புலியூர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு விலை ரூ.7 முதல் ரூ.8 வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.25 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் தாக்கியதில் 3 விவசாயிகள் இறந்து உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். வனவிலங்குகள் தாக்கி இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் உதவித்தொகையும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய ஆயிரத்து 980 கோடி ரூபாய் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதனை திரும்ப பெற வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தேயிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, தேயிலைக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கேரட் விதைகள் தரமற்ற நிலையில் இருக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன், உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது த.மா.கா. விவசாய அணி மாநில செயலாளர் கார்த்திக், மாவட்ட தலைவர் சந்திரன், நகர தலைவர் ரபீக், இளைஞரணி செயலாளர் சரத் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story