பிரான்ஸ் நாட்டு நிதி உதவியுடன் புதுச்சேரியில் குடிநீர், கழிவுநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்


பிரான்ஸ் நாட்டு நிதி உதவியுடன் புதுச்சேரியில் குடிநீர், கழிவுநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 15 July 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் நாட்டு நிதிஉதவியுடன் புதுவையில் குடிநீர், கழிவுநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரெஞ்சு தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரெஞ்சு துணை தூதர் பிலிப் ஜான்வியர் காமியாமா தலைமை தாங்கினார். விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரான்ஸ் நாட்டுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பிரிக்க முடியாத உறவு உள்ளது. புதுவையின் வளர்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் பங்கு அபரிதமாகும். இதற்காக குடியரசுத் தலைவர் மக்ரானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதுச்சேரி நகரம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி நகரம் சிறப்பான இடத்தைப் பெற உள்ளது. பிரெஞ்சு கட்டிடக் கலை நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர் இக்கட்டமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் பிரான்ஸ் நாட்டு நிதி உதவியுடன் புதுச்சேரியில் குடிநீர், கழிவுநீர் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கும். இந்த திட்டம் தொடர்பாக வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில்துறையினருடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பாரம்பரியத்தையும், கலைகளையும் பாதுகாப்பதில் பிரான்ஸ் நாடு முன்னோடியாக உள்ளது. புதுச்சேரியில் ஏராளமான பழங்கால கட்டிடங்கள் உள்ளன. இவற்றை பராமரிக்க இந்தோ–பிரெஞ்ச் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி பதிவு செய்ய வேண்டும். அதில் முக்கியமாக பொதுமக்கள் தான் நிர்வாகிகளாக இடம் பெற வேண்டும்.

அரசின் பிரதிநிதி ஒருவரை இடம் பெறச் செய்யலாம். கட்டிடங்களை பராமரிக்க அரசின் நிதியை எதிர்பார்க்காமல் நன்கொடைகளை திரட்டி நிதி பெறலாம். புதுச்சேரியில் வசிக்கும் பிரெஞ்சு மக்களின் நலனுக்காக கவர்னர் மாளிகையில் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படும். மேலும் அவர்களுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயமும் நடத்தப்படும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, மல்லாடி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா நடைபெற்ற பிரெஞ்சு தூதரத்திற்கு முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கு வந்த உடன் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

முன்னதாக நேற்று மாலை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர்வீரர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு கடற்கரை சாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் விதவிதமான வாணவெடிகள் வெடித்து சிதறின. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்..


Next Story