புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பது கனவாகவே இருக்கும்
புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பது என்பது கனவாகவே இருக்கும். அது நிறைவேறாது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
அரியாங்குப்பம்,
புதுவை சட்டசபைக்கு பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்ம சதுக்கம் எதிரே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். மாநில துணை தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் வரவேற்றார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.
போராட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–
கவர்னர் கிரண்பெடி முன்னுக்குப்பின் முரணாக பல்வேறு தகவல்களை கூறி வருகிறார் என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது எங்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகி வருகிறது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நான் பரிந்துரைக்கவில்லை என கவர்னர் கிரண்பெடி கூறியிருந்தார்.
2 நாட்களுக்கு முன்பு புதுவை வந்த மத்திய இணை மந்திரி, கவர்னர் பரிந்துரையின் பேரிலேயே நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்களை பரிந்துரைத்தது யார் என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது.
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக இருக்கும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள். புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பது என்பது கனவாகவே இருக்கும். அது நிறைவேறாது. ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் பகல் கனவு காண்கிறார். அதுவும் பலிக்காது. புதுவை மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு உடனே திரும்ப பெறவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்தன் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.