குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 July 2017 5:11 AM IST (Updated: 15 July 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி திருவண்ணாமலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குபேரன் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் கடும் வறட்சியின் காரணமாக வறண்டு விட்டன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் தேடி அலைந்தனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேரலிங்கம் சன்னதி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story