தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் போன்ற பயிற்சி அளிப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 84 அரசு பள்ளிகள், 131 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றது. மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 90 மாணவ–மாணவிகளுக்கு 2017–2018 ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மாணவ–மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதற்கு கல்வி உதவித்தொகை, இலவச சைக்கிள், லேப்–டாப், பஸ்பாஸ் என பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகின்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு பள்ளி மாணவ–மாணவிகளிடம் வாசித்தல், எழுதுதல், திறன் சோதனை செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவ–மாணவிகளில் பெரும்பாலானோருக்கு வாசிப்பு திறன் குறைவாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை பின்தங்கியுள்ள மாணவ–மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் எழுதுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.
விளையாட்டுமேலும் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ –மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சத்துணவு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படுகிறது. மாணவ– மாணவிகளுக்கு படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் கவனம் செலுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் மாநிலத்தில் கல்வியில் முதன்மை மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் திகழ ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தூர்கனி, சின்னராசு, மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சங்கரைய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.