நெல்லை, நாகர்கோவிலை சேர்ந்த 2 பெண்களின் வயிற்றில் இருந்து 21 கிலோ புற்று நோய் கட்டிகள் அகற்றம்


நெல்லை, நாகர்கோவிலை சேர்ந்த 2 பெண்களின் வயிற்றில் இருந்து 21 கிலோ புற்று நோய் கட்டிகள் அகற்றம்
x
தினத்தந்தி 16 July 2017 2:00 AM IST (Updated: 15 July 2017 8:11 PM IST)
t-max-icont-min-icon

2 பெண்களின் வயிற்றில் இருந்து 21 கிலோ புற்றுநோய் கட்டிகளை அகற்றி டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தெரிவித்தார். புற்றுநோய் கட்டி நாகர்கோவிவை சேர்ந்த பூதங்கம் (வயது 65) என்ற பெண்ணுக்கு கடந்த மூ

நெல்லை,

2 பெண்களின் வயிற்றில் இருந்து 21 கிலோ புற்றுநோய் கட்டிகளை அகற்றி டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தெரிவித்தார்.

புற்றுநோய் கட்டி

நாகர்கோவிவை சேர்ந்த பூதங்கம் (வயது 65) என்ற பெண்ணுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிறு வீக்கமாக இருந்தது. அவர், பல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் வயிற்றின் வீக்கம் குறையவில்லை. இதைத்தொடர்ந்து பூதங்கம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கார்பப்பையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 21–ந் தேதி பூதங்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்து கட்டி அகற்றப்பட்டது. அந்த கட்டி 14 கிலோ எடை கொண்டதாக இருந்தது. பின்னர் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

அதேபோல் நெலலை மணிமூத்தீசுவரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் (55). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கியம்மாளுக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்து 7 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

இது குறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டாக்டர்கள் சாதனை

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை கடந்த 2015 ஆண்டு தொடங்கப்பட்டது. புற்றுநோய் அறிகுறியுடன் வரும் பொது மக்களுக்கு நவீனமான முறையில் பரிசோதனை செய்யப்பட்டு, மேல் சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் நாகர்கோவிலை சேர்ந்த பூதங்கம் என்ற பெண்ணுக்கு வயிற்றில் இருந்து 14 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியும், நெல்லை மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்த இசக்கியம்மாள் என்பவர் வயிற்றில் இருந்து 7 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டிகளும் அகற்றப்பட்டன. நோயாளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

மிகவும் கடினமான அறுவை சிகிச்சையும் எளிதில் செய்ய முடியும். இது பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை, திருவனந்தபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் வெளிநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை செயல்படுகிறது. இந்த வசதியை நோயாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்

இது வரை முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 175 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. பூதங்கம், இசக்கியம்மாளுக்கு முதல்–அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ.2 லட்சம் வரை செலவாகும்.

தற்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புற்றுநோய் துறைக்கு ரூ.10 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. வருகிற டிசம்பர் மாதத்துக்கு புதிய கட்டிடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சலை பொறுத்த வரையில் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வரும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்காக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார அலுவலர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, அரசு டாக்டர்கள் ரவிச்சந்திரன், கண்ணன், ரேவதிபாலன், சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story