போத்தனூர்-பொள்ளாச்சி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது


போத்தனூர்-பொள்ளாச்சி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 15 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-16T00:32:34+05:30)

8 ஆண்டுகளுக்கு பிறகு போத்தனூர்- பொள்ளாச்சி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ரெயிலுக்கு மலர்கள் தூவி மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் போத்தனூர்- பொள்ளாச்சி இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.340 கோடி செலவில் தொடங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கிடையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரெயில் பாதை பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இந்த வழித்தடத்தில் 110 சிறிய பாலங்களும், 4 பெரிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த 37 ரெயில்வே கேட்களை மாற்றி, தற்போது 14 இடங்களில் ரெயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழித்தடத்தில் கிணத்துக்கடவில் மட்டும் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் போத்தனூர்-பொள்ளாச்சி அகலரெயில் பாதையில் ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி கொள்ளலாம் என்று பாலக்காடு கோட்டத் திற்கு அறிக்கை அனுப்பி னார். ஆனால் அனுமதி கிடைத்து 4 மாதங்கள் ஆன பின்னரும் ரெயில் போக்குவரத்தை தொடங்காமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. கோவை-போத்தனூர் இடையே ஏற்கனவே அகலரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ரெயில் போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சி நேற்று மதியம் கோவை ரெயில் நிலையத்தில் நடந்தது. மதியம் 1.35 மணிக்கு புறப்பட்ட ரெயிலை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ரெயிலை டிரைவர் ரங்கராஜன் என்பவர் ஓட்டினார். உதவி டிரைவராக ராஜேஷ்குமார் பணியில் இருந்தார். அந்த ரெயில் போத்தனூர், கிணத்துக்கடவு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வந்த போது ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று மலர் தூவி வரவேற்றனர். அந்த ரெயில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பிற்பகல் 3.10 மணிக்கு வந்தது. ரெயில் என்ஜின் முன்புறம் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

8 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் பொள்ளாச்சிக்கு வந்த ரெயிலுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், த.மு.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. கோவை புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், நகர செயலாளர் துரைபாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரிக்க வேண்டும்
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியதாவது:-

நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ரெயில் இயக்கப்படும் நேரம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் வசதிக்கு ஏற்பட ரெயில் இயக்க வேண்டும். மேலும் அகலரெயில் பாதை பணிகள் தொடங்குவதற்கு முன் இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சி-கிணத்துக்கடவு ரெயில் நிலையங்கள் பாலக்காடு கோட்டத்தில் இருப்பதால் எந்த பயனும் இருக்காது. எனவே பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து மதுரை அல்லது சேலம் கோட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story