துங்கா நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் தர்ணா


துங்கா நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 16 July 2017 3:34 AM IST (Updated: 16 July 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில், துங்கா நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டி நேற்று விவசாயிகள் 2–வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவமொக்கா,

சிவமொக்காவில், துங்கா நீரேற்று பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டி நேற்று விவசாயிகள் 2–வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போராட்ட களத்திலேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்.

துங்கா நீரேற்று பாசன திட்டத்தை விரைவில் முடிக்கக்கோரியும், கடைமடை வரை கால்வாய் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டியும் சிவமொக்கா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினரும், பசுமை பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து விவசாயிகள் சங்க தலைவர் பசவராஜப்பா தலைமையில் நேற்று முன்தினம் சிவமொக்காவில் உள்ள நீர்ப்பாசன பயன்பாட்டு கழகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2–வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்த போராட்டத்தின்போது, துங்கா நீரேற்று பாசன திட்டம் கடந்த 2015–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அதனால் விவசாயிகளின் நலன் கருதி அந்த திட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும் கால்வாய் தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போராட்ட களத்திலேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் சங்க தலைவர் பசவராஜப்பா தெரிவித்தார்.



Next Story