சேலம் அம்மாபேட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணியை தடுத்து பொதுமக்கள் சாலைமறியல்


சேலம் அம்மாபேட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணியை தடுத்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-16T03:48:01+05:30)

சேலம் அம்மாபேட்டையில் பாதாள சாக்கடை திட்ட பணியை தடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.149 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அந்த பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் குறிப்பிட்ட பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டும், சில பகுதிகளில் பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து அறவே துண்டிக்கப்பட்டும் பயன்பாடின்றி உள்ளது.
சேலம் அம்மாபேட்டை பிரதான சாலையில் சவுந்தராஜ பெருமாள் கோவிலில் இருந்து அம்மாபேட்டை ஆர்ச் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவே திட்டப்பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது. 10 மாதங்களுக்கு முன்பே பணி தொடங்கப்பட்டதால் அந்த சாலை கனகர வாகன போக்குவரத்து இன்றி முடங்கியது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடை வைத்திருப்பவர்கள் சிலர் வாடகை கட்டணம் கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே, பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் பொதுமக்களுடன் இணைந்து நாளை(திங்கட்கிழமை) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து, அப்பகுதி முழுவதும் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் ரவி மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள் ஒபுளிசுந்தர், தமிழ்செல்வன் மற்றும் 40 ஊழியர்களுடன் அம்மாபேட்டை பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க சென்றனர்.

அதற்காக 5 பொக்லைன் எந்திரம், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் 3 ஹிட்டாச்சி எந்திரம், 4 கம்பரசர் வண்டி ஆகியவையும் கொண்டு வரப்பட்டது. அதாவது விடுபட்ட பகுதியான சேலம் பட்டைகோவிலில் இருந்து சவுந்தரராஜ பெருமாள் கோவில் வரை உள்ள 500 மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்க தயாரானார்கள்.

அதையறிந்த அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பணி நடக்க விடாமல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். மேலும் மாநகராட்சி செயற்பொறியாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில், “ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் முழுமையாக முடித்து சாலைபோட்ட பின்னரே இந்த இடத்தில் பணியை தொடங்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களையாவது சந்து தெருக்களில் ஓட்டிச்சென்று குறிப்பிட்ட இடத்திற்கு அடைய முடியும். இந்த பகுதியில் வியாபாரமும் நடக்காது” என்றனர்.

செயற்பொறியாளர் ரவி கூறுகையில், “இன்னும் 20 நாட்களில் விரைந்து பணியை முடிக்க வேண்டி மற்ற இடங்களில் உள்ள பணிகளையெல்லாம் நிறுத்தி விட்டு, இங்கே வேலை செய்ய வந்துள்ளோம். அதை தடுத்தால் என்ன செய்ய முடியும்?. உங்கள் விருப்பப்படியே ஏற்கனவே பணிநடக்கும் இடத்தில் முழுமையாக முடித்து விட்டு, அதன் பின்னர் இங்கு பணியை தொடங்குகிறோம். அப்போது வந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது” என்றார்.அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story