ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என திருவண்ணாமலைக்கு வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் அமரர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி அருகே வருகிற 29–ந் தேதி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.இதனையொட்டி பந்தல் மற்றும் மேடை அமைப்பதற்கான கால்கோள் நடும் விழா (பந்தல்கால்) நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, செஞ்சி சேவல் வி.ஏழுமலை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, முன்னாள் வணிக வரி ஆலோசனை குழு உறுப்பினர் பெருமாள்நகர் கே.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. நளினி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–சசிகலாவுக்கு பரப்பனஅக்ரஹாரா ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் கூறிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, ஒரு விளம்பர பிரியர். ஆனால் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக கர்நாடக மாநில முதல்–அமைச்சர் சித்தராமையா உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பிறகே, உண்மை தெரியவரும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது குறித்து நமது முதல்– அமைச்சர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.