பாடாலூர் அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ள வந்த வாலிபர்கள் மீது தாக்குதல்
பாடாலூர் அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ள வந்த வாலிபர்கள் மீது தாக்குதல் குடிபோதையில் இருந்த தாசில்தார் டிரைவரை கிராம மக்கள் சிறைபிடித்தனர்
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர், கொட்டரை, குரும்பாபாளையம் கிராம பகுதியில் மருதையாறு ஓடுகிறது. இந்த மருதையாற்றின் குறுக்கே ரூ.100 கோடி கொட்டரை நீர்தேக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த நீர்தேக்க பணிகளுக்காக சுமார் 300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதனால் அரசுக்கு நிலம் கொடுத்த கிராம மக்களுக்கு சுமார் 42 தொகுப்பு வீடுகள் கட்டித்தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வீடு கட்டும் பயன்பாட்டிற்காக மணல் அள்ள மாட்டு வண்டியில் ஆதனூரை சேர்ந்த ராமர் (25), பாண்டிதுரை (22) நேற்று மருதையாற்றுக்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசனின் டிரைவரும், ஒதியம் கிராமத்தை சேர்ந்தவருமான சகாதேவன் உள்பட 3 பேர் சேர்ந்து ஆற்றில் ஏன் மணல் அள்ளுகிறீர்கள்? என கூறி ராமர், பாண்டிதுரை ஆகியோரை சரமாரியாக திடீரென தாக்கினார். அப்போது சகாதேவன் உள்ளிட்டோர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அந்த 2 பேருக்கும் அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆதனூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சகாதேவனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிறைபிடித்தனர். அப்போது அவரது நண்பர்கள் இருவரும் தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசன், பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அரசின் தொகுப்பு வீடு கட்ட மணல் அள்ள அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.