இன்று ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்: பெங்களூரு விதான சவுதாவில் ஓட்டுப்பதிவு


இன்று ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்: பெங்களூரு விதான சவுதாவில் ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 16 July 2017 10:59 PM GMT (Updated: 16 July 2017 11:06 PM GMT)

இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி பதவிக்கான தேர்தலையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

பெங்களூரு,

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக மீராகுமார் ஆகியோரும் போட்டியிட்டுள்ளனர். இதையொட்டி வாக்காளர்களான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட பெங்களூரு விதான சவுதாவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி எஸ்.மூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. விதான சவுதாவில் முதல் மாடியில் உள்ள 106–வது அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட வரும்போது கட்டாயம் தங்களின் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். ஓட்டுப்போடுவதற்கு முன்பு அந்த அடையாள அட்டையை தேர்தல் அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.

ஓட்டுப்போடும்போது அதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ள பேனாவில் தான் வாக்குச்சீட்டில் குறிக்க வேண்டும். வாக்காளர்கள் தங்களின் சொந்த பேனாவை பயன்படுத்தக்கூடாது. வாக்குச்சீட்டில் கையெழுத்து உள்பட எதையும் எழுதக்கூடாது. வாக்குச்சீட்டில் தேவை இல்லாமல் எழுதினால் அது செல்லாத ஓட்டாகிவிடும். வாக்காளர்கள் ஓட்டு ரகசியத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த தேர்தலையொட்டி விதான சவுதாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story