பெங்களூரு சிறையில் முறைகேடுகள் உயர்மட்ட குழு விசாரணை இன்று தொடங்குகிறது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகள் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு நியமித்து உள்ள உயர்மட்ட குழு விசாரணை இன்று தொடங்குகிறது.
பெங்களூரு,
சசிகலா உள்பட 3 பேருமே சிறை விதிகளின்படி நடத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு என்று சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி வந்தனர். இந்த நிலையில் தான் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரூபா, தனக்கு வந்த புகாரின் அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சோதனை நடத்தினார்.
இதில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் சிறையில் நடப்பதை ரூபா கண்கூடாக கண்டு வெகுண்டு எழுந்துள்ளார். சசிகலாவுக்கு தனி சமையலறையும், பார்வையாளர்களை சந்திக்க சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது குறித்து அவர் தனது மேல் அதிகாரியான சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.ரூபாவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த டி.ஜி.பி. சத்யநாராயணராவ், பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை விதிமுறைகளுக்கு மாறாக எதுவும் நடைபெறவில்லை என்று உறுதியாக கூறினார். இதை ஏற்க மறுத்த அதிகாரி ரூபா, தான் அறிக்கையில் கூறியுள்ள தகவல்கள் உண்மையானது தான் என்றும், அதுபற்றி வேண்டுமானால் விசாரணை நடத்துங்கள் என்றும் கூறி தனது அறிக்கையில் கூறிய தகவல்களை நியாயப்படுத்தி ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.
இதனால் டி.ஜி.பி. சத்யநாராயணராவ் மற்றும் அவருருக்கு கீழ் பணியாற்றும் டி.ஐ.ஜி. ரூபாய் ஆகியோருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் ரூபா மீண்டும் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்த தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு சாதாரண நிலை இருப்பது போன்ற நிலை அங்கே ஏற்படுத்தப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி.க்கு 2–வது முறையாக அதிகாரி ரூபா ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்த வசதிகள் அனைத்தும் அகற்றப்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை அழித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த ஆதாரங்களை வழங்கும்படி சம்மந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் அறிக்கையில் கூறி இருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகளின் இந்த பகிரங்க மோதல் கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2 அதிகாரிகளும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக குறை கூறியுள்ளன. இதற்கிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த விதிமுறை மீறல்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு கடந்த 13–ந் தேதி உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி வினய்குமார் நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில் டெல்லியில் வசித்து வரும் வினய்குமார் இந்த விசாரணைக்காக அவர் பெங்களூரு வந்துள்ளார். உயர்மட்ட விசாரணை இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. விசாரணை அதிகாரி வினய்குமார் மற்றும் குழுவினர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று நேரில் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா உள்ளிட்டோரிடமும் அந்த அதிகாரி விசாரணை நடத்துவார். இந்த விசாரணையை மிக விரைவாக முடித்து அடுத்த ஒரு வாரத்தில் முதல்கட்ட விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.