தூத்துக்குடியில் குடிநீர் வழங்க கோரி பொது மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் குடிநீர் வழங்க கோரி பொது மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்லானி தெரு, தெற்கு புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதி பொது மக்கள் தங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஜாமியா பள்ளிவாசல் முன்பு டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி என்ஜினீயர் ரூபன்சுரேஷ் பொன்னையா, மத்திய பாகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் காரணமாக அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.