கதிராமங்கலத்தை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது
கதிராமங்கலத்தை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர், கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் நேற்று, “கதிராமங்கலத்தை காப்போம்“ என்ற தலைப்பில் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலத்துக்கு நடைபயணம் செல்ல முயன்றனர். இந்த நடைபயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
பின்னர் கும்பகோணம் மீன்மார்க்கெட் அருகே கதிராமங்கலத்தை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சபிஅகமது, இணையதள பொறுப்பாளர் சரீப்ராசிக், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர்கள் முகமதுஅஸ்லம், தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கதிராமங்கலம் உள்ளிட்ட காவிரி படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும். இதற்காக போராடி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கதிராமங்கலம் கிராமத்துக்கு நடைபயணம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 30 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.