வாணாபுரம் அருகே குடிநீர்கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


வாணாபுரம் அருகே குடிநீர்கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 July 2017 3:15 AM IST (Updated: 18 July 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே குடிநீர்கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல், அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த வட்டாரவளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சதாகுப்பத்தில் கோவில்தெரு, ஆற்றுசாலை, பள்ளிக்கூடதெரு, நடுத்தெரு, தெற்குதெரு உள்ளிட்ட பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 200-க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான மின் மோட்டார்களை சீரமைக்க வேண்டும். கிணற்றை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலிகுடங்களுடன் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள வாழவச்சனூரில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வாணாபுரம் போலீசார் மற்றும் வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷம்ஷாத்பேகம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு பொதுமக்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர் வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தால்தான் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஊராட்சி செயலரை நீக்க வேண்டும் என்றும் கூறி அவரை முற்றுகையிட்டனர். அவர் வந்த காரையும் முற்றுகையிட்டு, அதன் மீது காலி குடங்களை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர், பழுதான மின் மோட்டார்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காலை 10.30 மணிக்கு தொடர்ந்த இந்த போராட்டம் மதியம் 2.30 மணிவரை நடந்தது. இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் திருவண்ணாமலை அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அம்மாவாசை, புருசோத்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்னும் 3 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறியதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story