ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 97–வது நாளாக போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 97–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2017 4:00 AM IST (Updated: 18 July 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 97–வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 97–வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தே.மு.தி.க மாநில துணை செயலாளர் ஜாகீர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடிநீர் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயம் அழியும், குடிநீரில் மாசு கலந்து நோய்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல மாதங்களாக போராடி வருகின்றனர். விவசாயத்தையும், அவர்களையும் காத்து கொள்ளவே இத்தனை போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

மக்களின் நியாயமான போராட்டத்திற்கு செவிசாய்த்து மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வருகிற 23–ந் தேதி நெடுவாசலுக்கு வருகிறார். போராட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் அன்றே நெடுவாசலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றார். அப்போது மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் நேதாஜி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் விஜயராஜகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story