விசாரணை நேர்மையாக நடைபெறவே அதிகாரிகள் பணி இடமாற்றம் சித்தராமையா அறிக்கை


விசாரணை நேர்மையாக நடைபெறவே அதிகாரிகள் பணி இடமாற்றம் சித்தராமையா அறிக்கை
x
தினத்தந்தி 18 July 2017 4:35 AM IST (Updated: 18 July 2017 4:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தில் விசாரணை நேர்மையாக நடைபெறவே அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று சித்தராமையா கூறி இருக்கிறார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரத்தில் சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, துறை நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கினார். அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் கசிந்து ஊடகங்களில் வெளியானது. இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்ட மாநில அரசு, இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

காரணம் கேட்டு நோட்டீசு

இந்த விசாரணையின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். முழுமையான அறிக்கை வழங்க ஒரு மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின்படி நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா ஆகியோருக்கு இருந்தது.

ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டுள்ளனர். இதற்கு காரணம் கேட்டு கடந்த 14-ந் தேதி 2 அதிகாரிகளுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகும் 2 அதிகாரிகளும் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கடும் நடவடிக்கை

அதிகாரிகள் சத்தியநாராயணராவ், ரூபா ஆகிய இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து கவனம் செலுத்தாமல், இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொண்டு இருந்தனர். இது துறை விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். மேலும் இது துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறும்போது அதிகாரிகள் 2 பேரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ளும் நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்ற நோக்கத்தில் டி.ஐ.ஜி. ரூபா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கையால் விசாரணை நேர்மையாகவும், பாகுபாடு இல்லாமலும் நடைபெறவே 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும். விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story