திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 5 பேர் சிறையில் அடைப்பு


திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 5 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 19 July 2017 4:00 AM IST (Updated: 19 July 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் ராம்நகர் பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் தங்கி இருப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு அறையில் தங்கி இருந்த முகமது பாபு(27), முகமது மமூன்(22), ரசூன்மல் சர்தர்(22), முகமது சகாதத்(28), ஆசிக்(20) ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்து வெள்ளியங்காடு பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் இருந்த அறையை முற்றிலுமாக சோதனையிட்டதுடன் அக்கம்பக்கத்தினரிடமும், அவர்கள் வேலை செய்த பின்னலாடை நிறுவனத்திலும் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இவர்கள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில், போலி ஆவணங்கள் மூலம் எடுக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் அவர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கதேசத்தை சேர்ந்த இவர்களுக்கு இந்தியாவில் குடியிருப்பதற்கான ஆதார் அட்டை எடுப்பதற்கு யார் உதவியது? என்பது குறித்தும் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் ஜே.எம்.1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவகவியரசு முன்னிலையில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்தவர்களை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கானோர் தங்கி இருந்து வேலை செய்து வருவதால் குற்றவாளிகள் எளிதாக மறைந்து கொள்ளும் இடமாக திருப்பூர் இருந்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் போதிய ஆவணங்கள் இன்றி இங்கு வந்து தங்கி இருக்கும் நிலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இது போல உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமலே பல வெளிநாட்டவர்கள் இங்கு தங்கி இருப்பதால், இது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருப்பூரில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்றும், அவர்கள் உரிய ஆவணங்க இன்றி தங்கி இருக்கின்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னலாடை நிறுவனங்களின் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, வடமாநில மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் எந்த வித விசாரணையும் இன்றி பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனால், தொழிலாளர்கள் என்ற போர்வையில் ஏராளமான குற்றபின்னணியில் உள்ளவர்கள் இங்கு வேலை செய்ய இது வாய்ப்பாக உள்ளது. இது திருப்பூர் தொழில்துறைக்கு உகந்தது அல்ல. இதனால் தொழில் நிறுவனத்தினர் தங்கள் நிறுவனங்களில் வேலை செய்யும் உள்மாநில, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்க வேண்டும். மேலும், புதிதாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்னரே அவர்களை பணிக்கு அமர்த்துவது பாதுகாப்பானதாக இருக்கும். என்றால் தான் தங்கள் வர்த்தகத்தை சிறப்பாக செய்ய முடியும். இதனை கருத்தில் கொண்டு தொழில்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூரில் நேற்று கைது செய்யப்பட்டவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததை போன்று, திருப்பூருக்கு வரும் வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்க இடைதரகர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இது திருப்பூரில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பாக அமைந்து விடும். இதனால் போலி ஆவணங்கள் தயாரித்து கொடுக்கும் இடைதரகர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story