ஆரணி அருகே காட்பாடி கல்லூரி மாணவி சரமாரி வெட்டிக்கொலை
காட்பாடி தனியார் கல்லூரி மாணவி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரின் பிணம், ஆரணி அருகே ஏரியில் வீசப்பட்டு கிடந்தது. பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்தூரில் இருந்து கீழ்நகர் செல்லும் வழியில் ஏரி ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள், ஏரியில் இளம்பெண் பிணம் ஒன்று கிடந்ததைப் பார்த்து ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், ஏரிக்கு விரைந்து சென்றனர். ஏரியில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அந்தப் பெண் பிணத்துக்கு அருகில் அடையாள அட்டை ஒன்று கிடந்தது. அதில் மோனிகா (வயது 19), வேலூர் விடுதியில் தங்கி காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3–ம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்மூலம் கொலை செய்யப்பட்ட இளம்பெண், கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பது அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து போலீசார் மாணவியின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு, போலீசார் தகவல் தெரிவித்து விசாரித்தனர். அப்போது, அந்த மாணவி நேற்று கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் மாணவியின் முகவரியை போலீசார் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவருடன் படிக்கும் சக மாணவிகளிடம், செல்போன் மூலமாக போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அந்த மாணவியின் சொந்த ஊர், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு என்பதும், தந்தை மதியழகன் முன்னாள் ராணுவவீரர், தாயார் ரமணி என்பதும் தெரிய வந்தது.
மாணவி மோனிகா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. ஏரியில் வைத்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எங்கேயோ கொலை செய்து பிணத்தை கொண்டு வந்து ஏரியில் வீசினார்களா? என்பது தெரியவில்லை. மேலும் மதியழகனுக்கு மற்றவர்களுடன் முன்விரோதம் உள்ளதா? அதன் காரணமாக மாணவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஆரணி தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி மாணவியின் தந்தை மதியழகன் கூறுகையில், எனது மகள் மோனிகா 13–ந்தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு காட்பாடி காந்திநகர் கல்லூரிக்கு சென்றாள். மகளுடன் நான் தினமும் காலை, மாலை இருவேளையில் செல்போனில் பேசி வந்தேன். அதேபோல் நேற்றும் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். அவளின் செல்போன் மதியத்தில் இருந்து ‘சுவிட்ச் ஆப்’ எனத் தகவல் வந்தது. மோனிகா கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாங்கள் வருவதற்குள் மகளின் பிணத்தை கைப்பற்றி ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும், என கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவம் வேலூர் மற்றும் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.