மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் விற்பனையாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு
கும்பகோணம் அருகே மதுக்கடைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடை விற்பனையாளர் தாக்கப்பட்டார்.
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே உள்ள நீரத்தநல்லூரில் இருந்த மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதுக்கடை அகற்றப்பட்டது. இப்பகுதியில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு மதுக்கடையை திறக்க கூடாது என மனு அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் நீரத்தநல்லூர்– மதனத்தூர் சாலை ஓரத்தில் 2 மதுக்கடைகள் திடீரென திறக்கப்பட்டது. மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீரத்தநல்லூர், மேலாததுக்குறிச்சி, காவற்கூடம் உள்ளிட்ட 3 கிராமங்களிலும் தண்டோரா மூலம் அனைவரும் போராட்டம் செய்ய இருப்பதால் பொதுமக்கள் திரண்டு வர வேண்டும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சுமார் 1000–க்கும் மேற்பட்டோர் மதுக்கடைகள் முன்பு திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தாசில்தார் மாணிக்கராஜ் மற்றும் கலால் வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, எழுதி கொடுத்தால் தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று கூறி கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் மற்றும் கலால் வட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பொதுமக்கள் கேட்டபடி எழுதி கொடுக்க மறுத்ததால் கிராம மக்கள் மதுக்கடைகளை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலால் வட்டாட்சியர் ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி மதுக்கடை திறக்கப்படாது என உறுதி அளித்தார். இதை ஏற்காத மக்கள் கடைகளில் உள்ள மதுபானங்களை எடுத்து செல்லுங்கள் என வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த மதுக்கடை விற்பனையாளர் குமார் கடையில் மதுபானங்கள் இல்லை என கூறினார். ஆனாலும் விடாத பொது மக்கள் கடையை திறந்து பார்க்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதனால் வேறு வழியின்றி தாசில்தார் கடையை திறக்க சென்றார். ஆனால் கடை விற்பனையாளர் குமார் கடை சாவி இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விற்பனையாளர் குமாரை விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த குமாரை போலீசார் காப்பாற்றி தாசில்தார் வாகனத்தில் ஏற்றி அமர வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பொதுமக்கள் தாசில்தார் வாகனத்தை சுற்றி வளைத்து குமாரை தாக்கினர். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலமை மிகவும் மோசமாவதை உணர்ந்த போலீசார் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி விற்பனையாளர் குமாரை சம்பவ இடத்தில் இருந்து வெளியே கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களள் கலைந்து சென்றனர்.