ஜி.எஸ்.டி. வரி விலக்கு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் உற்பத்தி குறைப்பு போராட்டம்


ஜி.எஸ்.டி. வரி விலக்கு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் உற்பத்தி குறைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2017 3:45 AM IST (Updated: 19 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விலக்கு கோரி, ராஜபாளையத்தில் கடந்த 2 வாரமாக விசைத்தறியாளர்கள் நடத்தி வந்த கால வரையற்ற போராட்டம், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தி குறைப்பு போராட்டமாக மாற்றப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி பகுதியில் சேலை மற்றும் மருத்துவ துணி உற்பத்தி செய்து வரும் 250–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. நூல் வாங்குதல், சாயமேற்றுதல், பசை போடுதல், நூலை பாவாக மாற்றி தறியில் இணைத்தல் என இந்த தொழிலில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். வரி இல்லாமல் இயங்கி வந்த விசைத்தறிக்கு, தற்போது மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் தொடங்கினர். கடந்த 2 வாரமாக ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் உடனடி மாற்று வேலை தேட முடியாமல் குடும்பத்துடன் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இவர்களது நலனை கருத்தில் கொண்டு, கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் உற்பத்தி குறைப்பு போராட்டமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரம் 3 நாட்கள் மட்டும் தறிகள் இயக்கப்படும் என சிறுகுறு விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று ராஜபாளையம் துணை தாசில்தார் வடிவேலுவிடம் மனு அளித்தனர். அதில் வரி விதிப்பை கண்டித்து தற்போது நடக்கும் போராட்டத்தால் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரமாக நடந்து வரும் போராட்டத்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பால் தங்களது வாழ்வாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே நிரந்தரமாக தறிகளை இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Next Story