ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2017 4:00 AM IST (Updated: 20 July 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து நேற்று நெடுவாசலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 99–வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அதில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து போராடி வருகிறோம். தற்போது திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது, விவசாயத்துக்கும் பாதிப்பு இருக்காது என ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் திட்டத்தை செயல்படுத்தவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள். திட்டத்தை ரத்து செய்வது குறித்து அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரியவருகிறது. திட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்றனர்.


Next Story