குடிநீர் கேட்டு திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2017 3:45 AM IST (Updated: 20 July 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி செம்பட்டு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி,

பருவ மழை பொய்த்ததாலும், காவிரி ஆறு வறண்டதாலும் திருச்சி நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 40 அடிக்கும் கீழ் போய்விட்டதால் மாநகராட்சி சார்பில் செய்யப்படும் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் நாள் தோறும் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ளது செம்பட்டு. இது மாநகராட்சியின் 37–வது வார்டை சேர்ந்தது. இங்குள்ள புது தெரு, எம்.கே.டி. காலனி, என்.எம்.கே. காலனி, குடி தெரு, பட்டத்தம்மாள் தெரு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை என கூறி இப்பகுதி மக்கள் நேற்று மாலை 3 மணி அளவில் திடீர் என மெயின்ரோட்டுக்கு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

பெண்கள் காலி குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்தனர். ஏராளமான ஆண்களும் இதில் பங்கேற்று சாலையில் அமர்ந்தனர். இதன் காரணமாக பரபரப்பு மிகுந்த திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் திருச்சி மார்க்கத்தில் விமான நிலையம் வரையும், புதுக்கோட்டை மார்க்கத்தில் மாத்தூர் வரையும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய மக்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் எங்கள் பகுதியில் ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. குடிநீருக்காக நாங்கள் தெரு தெருவாக அலைகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தான் மறியலை கைவிடுவோம் என கூறினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தினால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து செம்பட்டு குளத்தில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதாகவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னரே திருச்சி– புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து சீரானது.

போராட்டம் நடத்திய மக்கள் தங்கள் பகுதி குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மாநகராட்சி அலுவலகத்தில் 100–க்கு மேற்பட்ட மனு கொடுத்து விட்டோம். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளினால் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு தண்ணீர் எல்லாம் உப்பாக மாறிவிட்டது. எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனிடம் பல முறை கோரிக்கை வைத்து விட்டோம். அவரும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களிடம் குறை கேட்க இங்கு வரவும் இல்லை என கூறிய அவர்கள் அமைச்சருக்கு எதிராக கோ‌ஷம் போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story