பயிர் காப்பீட்டு தொகையை பெற்றுத்தரக்கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
பயிர் காப்பீட்டு தொகையை பெற்றுத்தரக்கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது, அலுவலகம் முன்பு கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண திடீரென போராட்டம் செய்தனர்.
அப்போது போது 2016–2017–ம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் அரை நிர்வாணத்தில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், வறட்சியால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருவிட்டன. வேளாண்மை துறை அறிவுறுத்தலின் பேரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் விவசாயிகள் காப்பீடு செய்தார்கள். இவ்வாறு காப்பீடு செய்தவர்களுக்கு இதவரைக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே காப்பீட்டு நிறுவனத்திடம் முழு தொகையாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் விவசாயிகளுக்கு பெற்று தர வேண்டும். நடப்பு ஆண்டில் இந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தை இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர் பாசனம் செய்ய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன், இலவச மின் வசதியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மாதவன் முன்னிலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் குஞ்சிதபாதம், கற்பனைச்செல்வம், வேல்முருகன், வேங்கடபதி, விஜயகுமார், குமரகுரு, மூர்த்தி, கவிதா உள்பட 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.