சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியர்கள்–முதலீட்டாளர்கள் மோதல்
சேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியர்கள்–முதலீட்டாளர்கள் இடையே நேற்று பயங்கர மோதல் நடந்தது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் புதிய பஸ்நிலையம் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒரு வருடம் கழித்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதன் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இதனை அறிந்த சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் பணத்தை முதலீடு செய்தவர்கள் அதனை திருப்பி கேட்டனர். அதற்கு நிர்வாகம் தரப்பில், சில மாதங்கள் கழித்து பணத்தை திருப்பி தருகிறோம் என்று கூறப்பட்டது.
அதன்பிறகு பல மாதங்கள் ஆகியும் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த சிலர் அவ்வப்போது சேலத்தில் உள்ள அந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வந்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த 15–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை சேலத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கு வந்தனர். அப்போது, அவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஜவுளிக்கடை, பியூட்டி பார்லர், மூலிகைச்சாறு கடைகளுக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் முதலீடு செய்த பணத்தை திருப்பி தரும்வரை இங்கிருந்து நகரமாட்டோம் எனக்கூறி கடைக்குள் அமர்ந்தனர்.
இதனால் கடை ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கிக்கொண்டனர். இதில் தேவி என்ற பெண் காயம் அடைந்து அங்கு மயங்கி விழுந்தார். அவருடன் வந்த சகோதரி சங்கீதாவையும் ஊழியர்கள் தாக்கியதால் அவரும் காயம் அடைந்தார். இந்த தாக்குதலில் கடை ஊழியர் ஒருவரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதலீட்டாளர்களில் சிலர் அங்கிருந்து வெளியே வந்து ஓட்டம் பிடித்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் உடனடியாக அங்கு சென்று அந்த நிறுவனத்தின் ஊழியர்களையும், முதலீட்டாளர்களையும் சமாதானப்படுத்தினர். பின்னர், மோதல் சம்பவத்தில் காயம் அடைந்த 2 பெண்களும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், சேகர் ஆகியோர் கூறுகையில், ரூ.25 லட்சம் முதலீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பிதரவில்லை. தற்போது பணத்தை கேட்டால் ஊழியர்கள் எங்களை ஓட ஓட விரட்டி தாக்குகிறார்கள். இந்த நிறுவனத்தில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.