நெடுவாசலில் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து பொதுமக்கள் போராட்டம்


நெடுவாசலில் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2017 4:30 AM IST (Updated: 23 July 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, நெடுவாசலில் தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை. கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் நெடுவாசலில் கடந்த ஏப்ரல் 12–ந் தேதி முதல் 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 102–வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தால் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் மாசு அடைந்ததைப்போல, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் கெட்டு விடும், அப்போது தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் கேன்களில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தி நெடுவாசலில் சுத்தமாக கிடைக்கும் நிலத்தடி நீரை கெடுத்துவிடவேண்டாம் என்பதை அரசுக்கு உணர்த்தும் விதமாக தண்ணீர் கேன்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வீசி எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயகாந்த் இன்று வருகை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசலில் 2–ம் கட்டமாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நெடுவாசல் வருகை தர உள்ளனர்.


Next Story