கிராம மக்கள் போராட்டம் எதிரொலி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டம்–கிணறு விற்பனை
ஊராட்சிக்கு வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டம்–கிணறு வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டது.
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரில் இருந்தது. இந்த தோட்டத்தில் ஏற்கனவே 2 கிணறுகள் வெட்டப்பட்டு இருந்த நிலையில், புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு லட்சுமிபுரம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கிணற்றால் ஊருக்கு குடிநீர் வழங்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் வற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமிபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துடன் பொதுமக்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்து கிணற்றையும், அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றையும் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக 3 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும், கிராமத்தில் யாரேனும் தனியாகவோ அல்லது மொத்தமாகவோ கிணற்றை சுற்றியுள்ள சுமார் 40 ஏக்கர் தோட்டத்து நிலத்தை விலைக்கு வாங்கிக் கொண்டால், கிணற்றை ஊருக்கு தானமாக வழங்க தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து லட்சுமிபுரம் கிராம மக்கள் கூட்டம் நடத்தி, அந்த நிலத்தை பொதுமக்கள் சேர்ந்து விலைக்கு வாங்குவது என முடிவு செய்தனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து, ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்து நிலத்தை விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது குறித்து தெரிவித்தனர்.
மேலும் அந்த நிலத்தின் ஆவணங்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். அப்போது பேசிய கலெக்டர் நிலம் குறித்த ஆவணங்களை பார்க்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் அந்த கிணறு உள்ள தோட்டத்தை வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக லட்சுமிபுரம் கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், பிரச்சினைக்குரிய இடம் குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அந்த நிலம் சுப்புராஜ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரித்த போது, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.