மாதம் முதல் தேதியில் பென்சன் வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மாதம் முதல் தேதியில் பென்சன் வழங்கக்கோரி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2017 3:00 AM GMT (Updated: 25 July 2017 11:04 PM GMT)

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் மாதம் முதல் தேதியில் பென்சனை வழங்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாதம் முதல் தேதியிலேயே பென்சனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டு தமிழக அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஹர்சன் கூறியதாவது:-

தமிழக அரசே பென்சனை ஏற்று நடத்த வேண்டும், பென்சனை பிரதி மாதத்தின் 1-ந் தேதியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 17 சதவீத டி.ஏ-வும்(பஞ்சப்படி), நிலுவையில் உள்ள 21 மாத டி.ஏ-வையும் உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஓய்வுபெறும் நாளிலே சட்டப்படியான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய ஒப்பந்த உயர்வு தொகையை உடனே வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதலே பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

ஆனால் அதை அரசு கண்டுகொள்ளாததால் கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதிலும் 13 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். அதனை தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்வதாக கூறியது. ஆனால் இதுவரை அதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.
தமிழக அரசு இதுபோன்ற மெத்தன போக்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் எங்களது தொடர் போராட்டங்களை சந்திக்க நேரிடும். தற்போது உள்ள தமிழக அரசு 5 வருடம் பணியாற்றும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு வழங்குகிறது. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்சன் உண்டு. ஆனால் 58 வருடமாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது இல்லை, பென்சனும் வழங்குவதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story