ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு


ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 26 July 2017 6:45 PM GMT)

ஊட்டி ஒன்றியத்தில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூக்கல், எப்பநாடு மற்றும் கடநாடு ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில், கடநாடு ஊராட்சி சொக்கநல்லி பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், கூக்கல் ஊராட்சி சிறியூர் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் 7 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து எப்பநாடு ஊராட்சி ஆனைகட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், உணவுப்பொருட்களின் இருப்பு, மாணவ–மாணவிகளின் வகுப்பறைகள், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு ஆகியவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

மேலும் அவர், அங்குள்ள ரே‌ஷன் கடையில் பொருட்களின் இருப்பு, தரம், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக அகழிகளை ஆழப்படுத்தும் பணி, சிறியூர் பகுதியில் குடிநீர் ஆதாரம் மேம்படுத்துதல், நடைபாதை பராமரித்தல் ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story