போதைப்பொருட்களை ஒழித்துக்கட்ட போலீசார் தீவிரம் கைது வேட்டை தொடர்கிறது


போதைப்பொருட்களை ஒழித்துக்கட்ட போலீசார் தீவிரம் கைது வேட்டை தொடர்கிறது
x
தினத்தந்தி 27 July 2017 2:00 AM GMT (Updated: 2017-07-27T01:48:27+05:30)

சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழித்துக்கட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கைது வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

சென்னை,

சென்னை நகரில் சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தன.

இதுபோன்ற சமூக சீர்கேடுகளை ஒழித்துக்கட்ட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக பெட்டிக்கடைகளிலும், டீக்கடைகளிலும் குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ரகசியமாக விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டதால் போதை வியாபாரம் அடியோடு ஒழிக்கப்பட்டது. போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சுற்றியுள்ள பெட்டிக்கடைகளிலும், டீக்கடைகளிலும் கூட போதைப்பொருட்கள் ரகசியமாக விற்கப்பட்டு வந்தன. கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருட்களின் வியாபாரம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
டீக்கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் சிகரெட்டுகள் கூட தற்போது விற்கப்படுவதில்லை. இதனால் அங்கு கூட்டத்தை காணமுடியவில்லை. இதையடுத்து வருமானத்தை பெருக்க ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசை, ஆப்பம் வியாபாரத்தை தொடங்கிவிட்டனர்.

போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகள் அருகில் போதைப்பொருள் வியாபாரம் எக்காரணத்தைக்கொண்டும் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் துணை கமிஷனர் சரவணன் (மயிலாப்பூர்), செல்வக்குமார் (பூக்கடை), சியாமளாதேவி (புளியந்தோப்பு), முத்துசாமி (பரங்கிமலை), டாக்டர் சுதாகர் (அண்ணாநகர்) உள்ளிட்டோர் போதைப்பொருட்கள் விற்பனையையும், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையையும் அடியோடு ஒழித்துக்கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story