ஆதிதிராவிட அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு ரத்து குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு


ஆதிதிராவிட அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு ரத்து குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு
x
தினத்தந்தி 26 July 2017 10:22 PM GMT (Updated: 2017-07-27T03:52:38+05:30)

ஆதிதிராவிட அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு அமைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடக அரசு பணியில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு குறித்து ஆராய கூடுதல் தலைமை செயலாளர் ரத்னபிரபா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளது.

அந்த அறிக்கை குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கோபால்கவுடா, டி.எஸ்.தாக்குர் ஆகியோரின் ஆலோசனையும் கேட்கப்படும்.

மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. உதாரணத்திற்கு கர்நாடகத்தில் கடந்த முறை பருமழை பொய்த்ததால் 160 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விதிமுறைப்படி பார்த்தால், அதில் வெறும் 35 தாலுகாக்கள் மட்டுமே வறட்சி பகுதிகளாக அறிவித்து இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசுக்கு நமது தலைமை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரதமருக்கு முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். புதிய திருத்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,630 கோடியை வழங்கியது. இதை முழுவதுமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

பருவமழைக்கு பின்பு பெய்ய வேண்டிய மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.795 கோடி வழங்கியுள்ளது. அதில் ரூ.402 கோடியை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கும் பணி இன்று(அதாவது நேற்று) முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டது. இதேபோல், 5.5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். மீதமுள்ள ரூ.393 கோடி நிதியும் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏரிகளை அரசாணையில் இருந்து விடுவிப்பதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசு இந்த வி‌ஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ராமநகர் மாவட்டம் பிடதி ஒன்றியம் சானமங்களா, பில்லகெம்பனஹள்ளி, பானந்தூர் கிராமங்களில் 77.29 ஏக்கர் அரசு நிலத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சந்தை விலையில் அந்த நிலத்தை மதிப்பிட்டு அதற்கான தொகையை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த தனியார் நிறுவனம் ரூ.982 கோடியை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு அந்த தொகையை செலுத்தாவிட்டால் அந்த நிலத்தை அரசு தன்வசப்படுத்திக்கொள்ளும்.

நபார்டு வங்கியிடம் இருந்து மாநில விவசாய கூட்டுறவு சங்கம் ரூ.1,550 கோடி கடன் பெற அரசு உத்தரவாதம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க ரூ.40.16 கோடி நிதி ஒதுக்கப்படும். கர்நாடக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு உணவு உண்ணும் மேஜைகள் ரூ.25.82 கோடி கோடி செலவில் வாங்கப்படும்.

மைசூரு பட்டு நூற்பாலை வளாகத்தில் ரூ.24.07 கோடி செலவில் 2–வது நூற்பாலை மையத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னப்பட்டணாவில் ரூ.8.77 கோடி செலவில் மிருதுவான பட்டு உற்பத்தி மையத்தை தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு அலுவலகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக ரூ.23.35 கோடி செலவில் பெங்களூரு சம்பங்கிராம்நகரில் ஒரு அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.


Next Story