புதுப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


புதுப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 26 July 2017 11:04 PM GMT (Updated: 2017-07-27T04:33:55+05:30)

ஆரணி அருகே புதுப்பட்டு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் கடந்த 3 மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒருமுறை என குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் இல்லை.

இதனால் கொதிப்படைந்த அந்த பகுதி பொதுமக்கள் 300–க்கும் மேற்பட்டோர் ஆரணி–சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆரணியிலிருந்து செஞ்சி, விழுப்புரம் நோக்கி சென்ற பஸ்களும் அங்கிருந்து ஆரணி, வேலூர் நோக்கி வந்த பஸ்களும் இரு புறமும் வரிசையாக நின்றன.

தகவல் அறிந்த ஆரணி தாசில்தார் ஆ.சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.சுப்பிரமணி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஏரிப்பகுதியில் பல நாட்களாக பழுதாகி கிடக்கும் மின்மோட்டாரை சரி செய்து தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story