மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டம் அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை


மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டம் அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 31 July 2017 4:30 AM IST (Updated: 31 July 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

மதுபான கடைகளை இழுத்துமூடும் போராட்டம் நடத்தப்போவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மதுபான கடைகள் அமைப்பதில் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்படுகிறது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை மீறி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரத்துசெய்யப்பட்ட மதுபான கடை உரிமையாளர்களுக்கு நகரின் பிரதான பகுதிகளில் அதே கடைகளை மீண்டும் நடத்த அனுமதி அளித்து வருகிறது.

தமிழக எல்லை பகுதியை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பல கடைகள் புதிதாக அமைக்கப்பட்டு அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அரசே காரணமாக இருந்து வருகிறது. உப்பளம் தொகுதியில் மட்டும் 10–க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலைகளான புஸ்சி வீதி, சின்னசுப்புராயபிள்ளை வீதி, பாரதி வீதி, சுப்பையா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்ட ஒரு மதுபான கடையை ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை தெருவில் புதிதாக அமைக்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அந்த கடைக்கு எதிரில், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாரதி வீதியில் மக்கள் குடியிருக்கும் பகுதியிலும், தனியார் கிளினிக்குகள், ஸ்கேன் சென்டர் அருகிலும் 2 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் பெண்கள் அந்த வழியாக செல்வதற்கே அஞ்சுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்பட்டு மக்கள் தினந்தோறும் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தற்போது போக்குவரத்து நெரிசல்மிகுந்த புஸ்சி வீதியில் மீண்டும் 2 மதுபான கடைகளை அமைக்க கலால்துறை அனுமதிக்க உள்ளதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது கலால்துறை அமைச்சர், எந்த கடைக்கும் உப்பளத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது. மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுபான கடைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

ஆனால் அமைச்சரின் அறிவிப்பு மதுபானம் போன்று தள்ளாட்டத்துடன் உள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுபான கடைகளை இடமாற்றம் செய்யவேண்டும். புஸ்சி வீதியில் மீண்டும் மதுக் கடைகள் அமைக்க அனுமதித்தால் தொகுதி மக்களின் நலன்கருதி தொகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடும் போராட்டத்தை எம்.எல்.ஏ. என்ற முறையில் நடத்துவேன் என்பதை ஆளும் அரசுக்கும், கலால்துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story