சோதனை சாவடி தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு பின்னால் வந்த லாரி ஏறியது


சோதனை சாவடி தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு பின்னால் வந்த லாரி ஏறியது
x
தினத்தந்தி 31 July 2017 4:45 AM IST (Updated: 31 July 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே சோதனை சாவடி தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் சாலையில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள சூழால், அடைக்காகுழியை சேர்ந்தவர் சியாமளன் (வயது60), தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஊரம்பு பகுதியில் உள்ள கடைக்கு புறப்பட்டார். சூழால் போலீஸ் சோதனை சாவடியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சோதனை சாவடியில் இருந்த கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சியாமளன் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடினர். அவர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை உடலை  எடுக்க விடமாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து, சியாமளன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த விபத்து குறித்து கொல்லங்கோடு சப்–இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தி லாரி டிரைவர் முவாற்றுமுகத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை கைது செய்தார்.

இறந்த சியாமளனுக்கு துளசி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைக்கு சென்றவர் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story