கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக வழக்கு போட்டால் சந்திக்க தயார் மு.க.ஸ்டாலின் சவால்


கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக வழக்கு போட்டால் சந்திக்க தயார் மு.க.ஸ்டாலின் சவால்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:45 AM IST (Updated: 31 July 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலம் போராட்டத்தை தூண்டியதாக வழக்கு போட்டால் சந்திக்க தயார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கதிராமங்கலம் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்கள் அளித்தனர். மேலும் எண்ணெய் கலந்து வந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெண்கள் அதனை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து கண்ணீர் வடித்தனர். மேலும் ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கி கூறினார்.

பின்னர் அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

கதிராமங்கலத்தில் போராட்டத்தை பெண்கள் கையில் எடுத்துள்ளீர்கள். இது நிச்சயம் வெற்றி பெறும். பெண்கள் முன்னேற்றத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு போன்ற பெண்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். இந்த போராட்டத்தை பார்க்கும் போது கருணாநிதி கொண்டுவந்த திட்டம் வளர்ந்து இருக்கிறது என்பதற்கு சாட்சி.

சட்டசபையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அ.தி.மு.க. அரசு அதை கண்டுகொள்ளவில்லை. பலமுறை வற்புறுத்திய பின்னர் அதனை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். கதிராமங்கலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. அப்படி வழங்குகிற நேரத்தில் மக்களின் பிரச்சினை பற்றி அறிந்திருக்க வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு குத்தகை உரிமம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதனால் தான் குழாய்வெடித்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆளும்கட்சியினர் காவல்துறையை வைத்து போராடியவர்களை அடித்து துன்புறுத்தி 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

கவனஈர்ப்பு தீர்மானத்தில் போராட்டக்காரர்களை அழைத்துபேசுங்கள் அல்லது நேரில் சென்று பேசுங்கள் என்று முதல்–அமைச்சரிடம் கூறினோம். ஆனால் எதையும் செய்யவில்லை. அதற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார். போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது கூட போராட்டங்கள் நடந்தது.

நீட்தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்தோம். அந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அது ஜனாதிபதிக்கு செல்லவில்லை. தமிழக அரசும் இதை வலியுறுத்தவில்லை. இதை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினோம். இதில் பங்கேற்க விடாமல் என்னை கைது செய்தனர்.

தி.மு.க. பற்றி தவறான பிரசாரத்தை ஆளும் கட்சி மற்றும் இன்னும் சில கட்சிகள் பரப்பி வருகின்றன. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஆய்வு செய்ய அனுமதி அளித்தோம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நீட்தேர்வு, சரக்கு மற்றும் சேவைவரி, உதய்மின்திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்துபவர்கள் இந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

அதேபோல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது என்றால் அதை அ.தி.மு.க. அரசு ரத்து செய்யாதது ஏன்?. எல்லாவற்றுக்கும் குறைசொல்லும் நீங்கள் தி.மு.க. கொண்டுவந்த காரணத்துக்காக மதுரவாயல் திட்டம், சேதுசமுத்திர திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். புதிய தலைமை செயலகத்தை குட்டிச்சுவராக்கி உள்ளனர். தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை கிடப்பில் போடும் அ.தி.மு.க. அரசு, இந்த திட்டத்தையும் கிடப்பில் போட தயங்குவது ஏன்?. கதிராமங்கலத்தில் மக்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெற போகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் காலில் அடிபணிந்து கிடக்கிறது.

தமிழகத்தில் மத்திய அரசு மதவாதத்தை திணிக்கவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அப்துல்கலாம் மணிமண்டபத்தில் திருக்குறள் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரை ஒரு மதத்துக்குள் கொண்டு இணைக்கக்கூடிய துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பாதுகாவலராக விளங்கிய அப்துல்கலாமை எவ்வளவு கேவலப்படுத்த வேண்டுமோ? அந்த அளவிற்கு மத்திய அரசு கேவலப்படுத்துகிறது. அதை தட்டிக்கேட்கும் முதுகெலும்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. எனவே இந்த ஆட்சி விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சி ஏற்பட வேண்டும். அப்போது தான் உங்கள் கோரிக்கை, பிரச்சினை தீர்க்கப்படும்.

அதற்காக ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்காமல் போராடுங்கள். உங்களுக்கு துணையாக நிற்போம். இதற்காக உங்களை போராட்டத்துக்கு தூண்டியதாக என் மீது வழக்கு போடுவார்கள். போடட்டும். சந்திக்க தயார். அப்போது தான் இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும். கதிராமங்கலம் பிரச்சினையை சட்டசபையில் ஆரம்பித்து வைத்தவன் நான். இந்த பிரச்சினையை ஆரம்பித்த உடனே நான் இங்கு வந்திருக்க வேண்டும். எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வந்ததாலும் தொடர்ந்து சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருந்ததாலும் உடனே வரஇயவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ராசா, மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு), துரை.சந்திரசேகரன் (தஞ்சைதெற்கு), கலைவாணன் (திருவாரூர்), எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன், மதிவாணன், மகேஷ்பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் சண்.ராமநாதன், நகர செயலாளர் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story