குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது: மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார்
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் வடக்குபட்டி கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் வடக்குபட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
பாலவநத்தம் கிராம பஞ்சாயத்தில் வடக்குபட்டி உள்ளது. இப்பகுதியில் 200 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் அனைவருமே விவசாயம் மற்றம் கூலி தொழிலாளர்கள் ஆவர். கிராம பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசைப்பம்புகளும் பழுதாகி உள்ளதால் மற்ற புழகத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைப்பதில்லை. அடிப்படை வசதிகளும் சரியாக இல்லாத நிலையில் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே எங்கள் பகுதிக்கு முறையாக கழிவுநீர் கலக்காமல் குடிநீர் விநியோகம் செய்யவும் மற்ற புழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று அருப்புக்கோட்டை யூனியனில் உள்ள பெரியநாயகபுரம் கிராமத்தில் அருந்ததியர் காலனி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
பெரியநாயகபுரம் அருந்ததியர் காலனியில் நாங்கள் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம், கழிப்பறை கட்டி தர வேண்டும். முறையான சாலை வசதிகள் இல்லை. இலவச தொகுப்பு வீடுகள் அமைத்து தரக்கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் சரியான வாழ்வதாரம் இன்றி தவிக்கும் எங்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.