திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பூரில் நேற்று மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர்,
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நீரின்றி காய்ந்து கிடக்கின்றன. மழையை நம்பி விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் காய்ந்து போனது.
இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். மேலும், கால்நடைகளுக்கு தீவன பயிர்களை கூட விளைவிக்க முடியாமல் சில விவசாயிகள் தங்களது கால்நடைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தங்களது பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
திருப்பூரில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இரவு குளிர்ந்த காற்றும் வீசிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, புஷ்பா ரவுண்டானா, பார்க் ரோடு, காலேஜ் ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு உள்பட பல பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், டி.எம்.எப். அருகே ரெயில்வே கீழ்மட்ட பாலம், ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் ஆகிய பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. இதில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி தங்களது வாகனங்களில் சென்றனர். ராயபுரம் மிலிட்டரி காலனியில் ஒரு வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது.
பின்னர் மழை நின்ற பின் அந்த நீரை பாத்திரம் மூலம் அந்த வீட்டை சேர்ந்த பெண் அகற்றினார். மாலை நேரம் மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ–மாணவிகள், அலுவலகத்திற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.